Friday, January 29, 2010

Video of Puri Jagannatha Snana Yatra Festival (2007)


A short video of the annual Snana Yatra festival (bathing of Lord Jagannatha) in Puri recorded in June, 2007. Once a year the deities of Lord Jagannatha, Balabhadra and Subhadra are taken out of the temple for a bathing ceremony.This occurs approximately two weeks before the Ratha Yatra festival. In this video you can see Lord Jagannatha dressed in hativesh, the "elephant dress".

Saturday, January 9, 2010

கூடாரைவல்லி

கூடாரைவல்லி

மார்கழி 27 - 11.01.2010 - திங்கள்
ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீர
ங்கராஜ ஹரிநந்தன யோக த்ருச்யாம்
ஸாக்ஷ¡த் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்யசரண: சரணம் ப்ரபத்யே - கோதா ஸ்துதி.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீ
வேங்கடவற் கென்னை விதியென்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு. - உய்யக்கொண்டார் பாடல்.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை அருளிச் செய்தவள். அதில் 27ஆவது பாசுரமான 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' எனும் பாசுரத்தைப் பாடியதும் திருமால் அவளுக்குத் திருமணவரம் தந்ததாக ஐதீகம். இந்த கூடாரவல்லியன்று திருமால் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளையும், ஆண்டாளையும் தரிசிப்போருக்கு வாழ்வில் நல வளங்கள் சேரும்.
ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஸ்ரீ கிருஷ்ணருக்கு உகந்த மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடி, 27ம் நாள் "கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" எனும் பாடல் பாடி, "மூடநெய் பெய்து முழங்கை வழி வார" என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரவடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்வது நலமளிக்கும்.
மார்கழி மாத 27ம் நாளே "கூடாரைவல்லி" நாளாக கொண்டாடப்படுகின்றது.
ஆண்டாளின் முப்பது பாடல்களிலும், தோழியரை அதிகாலைப் பொழுதில் எழச் செய்து கண்ணனைக் காண அழைக்கும் பாடல்களாகவும், பாவை நோன்பின் மாண்பினையும், நோன்பு இருந்தால் மாதம் மும்மாரியும், நல்வாழ்க்கையும் கிடைக்கும் என்பதும் விபரமாக இருக்கின்றது.
கூடாரை வல்லிக்குக் காரணமாகவிருந்த ஆண்டாளையும், அவள் எழுதிய திருப்பாவையையும் காண்போம்.
இந்து சனாதன மதத்தினுள், ஷண்மதங்களில் ஒன்றாகிய, ஸ்ரீ வைஷ்ணவம் - ஸ்ரீ மஹாவிஷ்ணுவைப் போற்றி வழிபாடு செய்யும் வகை ஆகும்.
வேதங்கள் போற்றும் வேதநாயகனாகிய ஸ்ரீ மஹா விஷ்ணுவை - தமிழில் பனிரண்டு ஆழ்வார் திருமக்கள் எழுதிய ஐந்தாம் வேதம் என்று போற்றப்படக்கூடிய "நாலாயிர திவ்ய பிரபந்தம்" (4000 பாடல்கள்) - போற்றி பறை சாற்றுகின்றன. (இந்தப் பதிவின் முன் பதிவாகிய 'ஆழ்வார்கள் அருளிய அமுதம்' காணுங்கள்). இப்பாடல்கள் அனைத்தும் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அனைத்து லீலைகளையும் பகர்கின்றது.
இடைக்காலத்தில் (பல்லவர்கள் காலத்திற்கு பிறகு) தமிழுக்கு ஏற்பட்ட தொய்வுக்கு, இப்பாடல்கள் அனைத்தும் தமிழை சீர்தூக்கி நிறுத்தின. கேட்க கேட்க தெவிட்டாத தமிழ்ப் பாடல்கள். தமிழன்னையின் அழகுக்கு மேலும் அழகூட்டின.
பனிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாராக விளங்கியவர் கோதை நாச்சியார் எனும் ஆண்டாள். இவள் எழுதிய பாடல்கள் தமிழன்னைக்கு சூடாமணியாக விளங்குகின்றன.
ஆண்டாள் :
பனிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் பெரியாழ்வார். அவர் தினமும் திருமாலுக்கு திருமாலைத் தொண்டு செய்துகொண்டிருந்தார். ஸ்ரீ வில்லிப்புத்தூரில் அவரின் நந்தவனத்தில்,
"பஞ்சவர்ஷா திவ்ய ரூபா திவ்யாபரண பூஷிதா, நீலோத்பலதள ச்யாமா திவ்யாம்பர ஸமாவ்ரதா" என்ற ஸ்தலபுராணத்தின்படி, ஒளி வீசும் முகத்துடனும், அழகே உருவாக, திருத்துழாய் எனும் துளசிச் செடியின் கீழ் பூமா தேவியின் வடிவாக அவதரித்தாள்.
அக்குழந்தையை பெரியாழ்வார் கண்டெடுத்து, கோதை என பெயர் சூட்டி, (கோதை என்றால் தமிழில் மாலை என்றும் பொருளுண்டு) தமிழையும், கிருஷ்ண பக்தியையும் ஊட்டி, அருமையுடனும், பெருமையுடனும் திருமகள் போல (பெரியாழ்வார் திருமொழி 3) வளர்த்து வந்தார்.
குழந்தை முதலே கோதை கண்ணன் மீது பெரும் பக்தி கொண்டாள். அந்த பக்தி நாளாக நாளாக கண்ணன் மீது காதலாக மலர்ந்தது. எங்கு நோக்கிலும் கண்ணனின் திருவுரு தெரிவது போலவே மனம் மாறினாள்; விண்ணின் நீலம் கண்டால் அது கண்ணனின் நிறம் என்பாள்; அழகு மலரைக் கண்டால் அது கண்ணனின் கண் என்பாள். கண்ணனையை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்றே காலம் நகர்த்தினாள்.
வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து என்ற பாடல் மூலம் ஆயிரம் யானைகள் சூழ, உறவினர்கள் புடை சூழ கண்ணனை திருமணம் புரிய வேண்டும் என்று கனவு காண்கின்றாள்.
பெரியாழ்வார் வீட்டில் இல்லாத சமயம், பெருமானுக்கு சார்த்துவதற்காக வைத்திருந்த மாலைகளை எடுத்து, தான் அணிந்து கொண்டு, கண்ணனுக்குத் தோதாக, கோதை தான் இருக்கின்றேனா என்று கிணற்று நீரின் நிழலில் (கண்ணாடியில் தெரிவது போன்ற) பிரதிபிம்பத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்வாள். (ஆண்டாளின் அழகைக் காட்டிய அந்தக் கிணறு இன்றும் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆலயத்தில் உள்ளது). அதன் பின்னே மாலைகளை பெருமாளுக்குச் சூடக் கொடுப்பாள். ஆகையாலே ஆண்டாள், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியானாள்.
பெரியாழ்வார் மிகப் பெரும் தமிழ் ஆர்வலர், புலவர். அவரின் மகள் அவரைப் போலவே தமிழ்ப் பாக்கள் தொடுப்பதில் ஆர்வமாயிருந்தாள். ஆண்டாளின் பாடல்கள் இயற்றரவிணை கொச்சகக்கலிப்பா என்று சொல்கின்றார்கள். மிகக் கடினமான யாப்பு வகையைச் சேர்ந்தது. ஒரு பெண் அந்தக் காலத்தில் இப்படி யாத்தது மிகவும் ஆச்சர்யம் அளிக்கின்றது. ஆண்டாள் அருளியது திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி.
ஆண்டாளின் திருப்பாவையில் பெண்மையின் குணங்களும், மென்மையும், நளினமும் நிறைந்திருக்கிறது. காக்கைப்பாடினியார், காரைக்காலம்மையார் போன்ற பெண் புலவர்கள் எழுதியது இலக்கியமும், பக்தியும் சேர்ந்தது. ஆனால், ஆண்டாளின் பாடல்களின் கண்ணனை மட்டுமே அடைய வேண்டும் என்ற காதல் வேட்கையில் பாடும் பாடல்களில் காதலும் கவினுற சேர்கின்றது. ஜெயதேவர் தன் அஷ்டபதியில் நாயகன் நாயகி பா(ba)வனையில் எழுதியிருந்தாலும், ஆண்டாள் - ஒரு பெண்ணின் கோணத்திலிருந்து பரமனைக் காதலால் பாடுவது அருமையாக அமைகின்றது.
திருப்பாவையில் பெண்மையின் - ஆசைகள், வேண்டுதல்கள், நோன்பு நோற்றல், அணிகலன்கள் அணிதல் - முதலானவை மிளிர்கின்றது.
பெண் தன்மை மட்டுமல்லாமல் ஆண்டாள் பல நோக்குடையவளாக இருந்திருக்க வேண்டும். விஞ்ஞானம் (கடல் நீர் ஆவியாகி மேகத்திலிருந்து மழை பொழிவது), வானவியல் (வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று - இந்த வரிகளைக் கொண்டே ஆண்டாளின் காலத்தை அறிஞர்கள் நிர்ணயித்திருக்கின்றார்கள்) போன்ற கலைகளையும் அறிந்திருக்கின்றாள் என்பது புலனாகின்றது.
இயற்கைக் காட்சிகளை வர்ணிக்கையில், முதன் முதலில் காட்சியைப் பார்க்கும், குழந்தையின் குதூகலம் தெரிகின்றது. பாக்களைப் பார்க்கையில் இலக்கண முதிர்ச்சி தெரிகின்றது. பரந்தாமன் மேல் கொண்ட அளவிற்கடந்த பக்தி தெரிகின்றது.
இனி ஆண்டாளிடம் வருவோம்.
தினமும் ஆண்டாள் செய்து வரும் 'மாலையைச் சூடிப் பின் அரங்கனுக்கு சூடக்கொடுப்பதை' ஒரு நாள் பெரியாழ்வார் கண்டு அதிர்ச்சி கொள்கிறார். கண்ணனே என் கணவன் ஆவான் என எண்ணம் கொண்டிருக்கும் ஆண்டாளைக் கண்ட பெரியாழ்வார்க்கு கவலை அதிகமாகிறது. அவரின் கவலையை நீக்கும் விதமாக ஆண்டாளை பங்குனி உத்திரத்தன்று ஏற்போம் என்கிறார் பரமன்.
பரந்தாமனிடம், பெரியாழ்வார் - ஆண்டாளை ஸ்ரீவில்லிப்புத்தூரில், ஊரார், உறவினர்கள் அனைவரையும் சாட்சியாக நிறுத்தி, தாங்கள் ஏற்க வேண்டும் என்று - ஒரு பெண்ணின் தந்தையின் ஸ்தானத்தில் நின்று வரம் கேட்கிறார். அவ்வண்ணமே "சொன்னவண்ணம் செய்யும் பெருமாள்" அருள்பாலிக்கின்றார்.
அந்த நாளும் வந்தது. ஊரார், உறவினர் அனைவரும், ஆண்டாளை அலங்கரித்து வந்து பெருமானிடம் சேர்க்க வருகின்றனர். நேரம் போய்க்கொண்டேயிருக்கின்றது, ஆனால் பெருமானைக் காணோம். இனியும் பொறுக்க மாட்டாத ஆண்டாள், கருடாழ்வாரை மனமுருக பிரார்த்தனை செய்து, 'பரந்தாமனை உடனே அழைத்துவந்தால், எங்கள் அருகிலிருக்கும் பாக்கியம் உங்களுக்கு உண்டு' என்று வேண்டுகிறார். கருடாழ்வார் மறுகணமே பெருமானிடம் சென்று, இனி ஒரு கணம் தாமதித்தாலும் ஆண்டாள் உயிர் பிரிவாள் என எடுத்துச் சொல்ல, பரந்தாமன் கையில் செங்கோல் ஏந்தி, ரங்கமன்னனாக, இன்முகத்துடன் ஆண்டாளை கரம் பிடிக்கின்றார். (ஸ்ரீ வில்லிப்புத்தூர் புராணம்)
கருடாழ்வார் உதவியதால், ஆண்டாளின் வாக்குப்படியே ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பெருமானுக்கு அருகிலிருக்கும் பாக்கியத்தை கருடாழ்வர் பெற்றார்.
இனி கூடாரைவல்லி :
மார்கழி மாதத்தில் தக்க கணவனை அடைய பாவை நோன்பு காப்பது பெண்களின் பழங்கால விரதங்களில் ஒன்று.
அதிகாலைப் பொழுதில் தோழியரை எழுப்பி பெருமானைக் காண அழைக்கின்றாள் ஆண்டாள். நோன்பு சமயத்தில் "நெய்யுண்ணோம், பாலுண்ணோம்", கண்களில் மையிடோம், மலரிட்டு முடியோம் என்று பெண்கள் தங்களை வருத்திக்கொண்டு இறைவனைப் பணிகின்றார்கள்.
மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில், விரதம் முடிக்கின்றார்கள். திருப்பாவையின் 27வது பாடல் "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" என்று பாடி அக்காரவடிசல் எனும் உணவினை இறைவனுக்குப் படைத்து விரதம் முடிக்கிறார்கள். 27வது நாளிலே பரமந்தாமன் ஆண்டாளுக்கு திருமண வரம் அளித்த நன்னாள்.
ஆண்டாளின் பாசுரங்களில் ஆபரணங்கள் பூணுவதைச் சொல்கின்றாள். சூடகம் எனும் கையில் அணியும் வரிவளை எனும் வளையலைச் சொல்கின்றாள். பாடகம் எனும் காலில் அணியும் ஓசை எழுப்பாத கொலுசு பற்றி சொல்கின்றாள். செவிப்பூ, காறை என்று பல அணிகலன்களை அணிந்து மகிழ்வோம் என்கின்றாள். அவள் சொன்ன பல அணிகலங்கள் இன்று இல்லை. பாடகம் - சிலர் மட்டுமே விரும்பி அணிகின்றார்கள்.
ஆண்டாளுக்குப் பின் பிறந்தவர்; ஆனால் ஆண்டாளின் அண்ணன் ஆனார் :
வைணவ ஆச்சார்யர்களுள் மிக முக்கியமானவராகப் போற்றப்படக்கூடியவர் ஸ்ரீ ராமானுஜர். வைணவத்தை மேலும் தமிழகத்தில் ஆழமாக பரப்பியவர். ஆண்டாளின் மீதும், அவளின் பாசுரங்களின் மீதும் பெரும் பக்தி கொண்டவர். "திருப்பாவை ஜீயர்" என்றே போற்றப்பட்டார்.
ராமானுஜர் திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோயில்) ஆண்டாளின் பாடலில் உள்ள வேண்டுதலுக்கேற்ப,
"நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்; நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ"
நூறு தடா (தடா என்றால் பெரிய அடுக்கு அல்லது பெரிய குவளை அல்லது பெரிய அண்டா) முழுக்க அக்காரவடிசலும், வெண்ணையும் சேர்த்து நிவேதனம் செய்தார். ஆண்டாள் எண்ணிய செயலை இவர் செய்து காட்டினார்.
ஒவ்வொரு §க்ஷத்ரமாக சேவித்துக்கொண்டு, பிறகு ஸ்ரீ வில்லிப்புத்தூர் வந்து பெருமானை சேவிக்கவந்தார். கோயிலினுள் நுழைந்ததுமே, "வாரும் என் அண்ணலே" என்ற அழகிய பெண் குரல் ஒன்று இவரை நோக்கி அழைத்தது. சுற்று முற்றும் பார்த்தார். யாரும் இல்லை. மீண்டும் மீண்டும் அந்த அழகிய குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. யாராக இருக்கும் என்று ஆவலுடன் பார்க்க, அங்கே கருவறையிலிருந்து ஆண்டாள் அழகாக அசைந்து வந்து, "வாருங்கள் என் அண்ணா" என்று அழைத்தாள். பக்தியுடன் பரவினார் ராமானுஜர். ஆண்டாளுக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்துப் பிறந்தவர் ராமானுஜர். தம்பி என்றல்லவோ ஆண்டாள் அழைக்க வேண்டும். ஏன் அண்ணன் என்று அழைத்தார்? அதற்கு பதிலும் அவளே சொல்கின்றாள். என் எண்ணத்தை (நூறு பெரிய அடுக்குகள் முழுக்க அக்காரவடிசல் நிவேதனம் செய்த) நிறைவேற்றுபவர் யாராக இருக்க முடியும்? எனக்கு அண்ணன் என்று ஒருவர் இருந்திருந்தால் அவரை நிறைவேற்றச் சொல்லியிருப்பேன். அண்ணனோடு பிறக்கவில்லை. ஆனாலும், என் விருப்பத்தை அண்ணன் ஸ்தானத்தில் நின்று நிறைவேற்றியவர் தாங்கள் தான். ஆகையாலேயே அண்ணா என்று அழைக்கின்றேன் என்றாள். ராமானுஜர் பூரித்து நின்றார்.
ஆண்டாள் திருப்பாவையின் பாடல்களின் தன்னை ஆண்டாள் என்றோ, பெரியாழ்வாரின் மகள் என்றோ நினைந்து பாடாமல், பிருந்தாவனத்தில் உள்ள கோபியரில் ஒருவராகவே கற்பனை செய்து கொண்டு பாடி மகிழ்ந்தாள். நிகழ்காலத்திலும் தன்னை ஒரு கோபிகா ஸ்த்ரீயாகவே கற்பனை செய்து கொண்டு வாழ்ந்தாள்.
அதே போல் ராமானுஜர் ஆண்டாளின் திருப்பாவையை பாடும்போதெல்லாம் தான் ஒரு ஆச்சார்யர் என்றோ, பாஷ்யங்கள் பல எழுதிய குரு ஸ்தானத்தில் இருப்பவர் என்றோ நினையாமல், ஆண்டாள் எண்ணியது போலவே, தானும் ஒரு கோபிகா ஸ்த்ரீயாகவே கற்பனையுலகில் சஞ்சரித்து, நிகழ்வுலகில் நடந்துகொள்வார்.
நம்பியின் பெண்ணா? நப்பின்னையா?
இதே ராமானுஜர் ஒரு சமயம் ஆண்டாளின் பாடல்களைப் பாடிக்கொண்டே, திருக்கோட்டியூர் நம்பியின் (இவரும் ஒரு ஆச்சார்யர் தான்) வீட்டிற்குச் சென்றார். கதவு சார்த்தியிருந்தது. "செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்" என்ற பாடலை பாடிநின்றார். பாசுர ஒலி கேட்டு, வீட்டின் உள்ளேயிருந்த திருக்கோட்டியூர் நம்பியின் பெண் ஆகிய தேவகி, அலங்கார ஆபரணங்கள் பூண்டு, வளையோசை எழும்ப, கதவைத் திறக்கிறார். ஆண்டாள் பாசுரத்தில் இதே போன்ற கட்டம் வரும்போது, ஆண்டாளுக்காக கண்ணனின் மனதுக்கினிய நப்பின்னை கதவைத் திறப்பாள். அவளை ஆண்டாளும் தோழியரும் பக்தியுடன் சேவிப்பார்கள்.
அதே போல இந்தப் பாடல் பாடி முடித்ததும், ராமானுஜருக்கு கதவைத் திறந்தது நம்பியின் பெண் என்று புலனாகாமல், ஆண்டாள் பாசுரங்களில் மூழ்கியிருந்ததால், கதவைத் திறந்த நம்பியின் பெண் "நப்பின்னையாகவே" கண்ணுக்குத் தெரிந்தாள். உடனே நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து நமஸ்கரித்து சேவித்தார். நம்பியின் பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை, ஏன் ஒரு மஹாநுபாவர் நம் காலில் விழ வேண்டும் என்று பதறியபடியே உள்ளே வந்து தந்தையிடம் நடந்ததைச் சொல்ல, மேதாவிலாசம் கொண்ட அவரும் புன்சிரிப்போடு நடந்ததைப் புரிந்து கொண்டு, அவளிடம் நிலையை விளக்கினார்.
ஆண்டாளின் திருப்பாசுரங்கள் நம்மை ஆண்டுகொள்ளும். நம்மை தெய்வ ஸந்நிதானத்திற்கே அழைத்துச் செல்லும் வகையில் அமைந்தது.
ஆண்டாள்,
தமிழிலக்கணத்தால் தமிழை ஆண்டாள்,
பக்தியால் பரமனை ஆண்டாள்,
நல்வழிகாட்டியதால் தோழியரை ஆண்டாள்,
ஆழ்வாரை (தந்தையை) ஆண்டாள்,
பரமனோடு கூடியதால், அவளை பக்தியால் பரவும் நம் அனைவரையும் ஆண்டாள்.
திருப்பாவையின் அனைத்து பாடல்களும் தேன் போன்று தெவிட்டாத சுவையுடையது. மார்கழி மாதத்தின் அதிகாலைப் பொழுதில் இதமான பனி உடலைக் குளிர்விக்க, திருப்பாவை பாடல்கள் உள்ளத்தை மிக நிச்சயமாகக் குளிர்விக்கும்.
கூடாரைவல்லி தினத்தன்று, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியுடன் கூடிய பெருமாளை சேவிப்போம். அக்காரவடிசல் அன்னதானத்தில் பங்குகொள்வோம். பக்தி செய்வோம். பயனுறுவோம்.
அக்காரவடிசல் செய்யும் முறை :
நன்றி : ஸ்ரீ தேசிகன்

தேவையான பொருள்கள்:
பச்சரிசி- 2 ஆழாக்கு
கடலைப் பருப்பு- 1/2 ஆழாக்கு
பயத்தம் பருப்பு- 1/2 ஆழாக்கு
நெய்- 1 கிலோ
கொதிக்கவைத்த பால்- 4 லிட்டர்
வெல்லம்- 1 கிலோ
முந்திரிப்பருப்பு- தேவையான அளவு
கிஸ்மிஸ்- தேவையான அளவு
ஜாதிபத்திரி- 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர்- அரிசியை வேகவைக்க
செய்முறை:
முதலில் அரிசியை 200 கிராம் நெய்யில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். அத்துடம் கொதிக்கும் நீர் மற்றும் பாலை சேர்க்கவும். அதே நேரத்தில் இன்னொரு வாணலியில் 1 ஆழாக்கு நெய்விட்டு இரண்டு பருப்புகளையும் வறுத்து அரிசிக் கலவையுடன் சேர்த்து வேகவைக்கவும். நன்கு வேகும்வரை அடிக்கடி அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும்.வெல்லத்தை சிறிது நீரில் கரைத்து வடிகட்டி வேகவைத்த கலவையுடன் சேர்த்துக் கிளறவும்.மிச்சமிருக்கும் நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொன்னிறமாக வறுக்கவும். ஜாதிபத்திரியையும் சேர்த்து வறுத்து சாதக் கலவையின் மேலே கொட்டிக் கலக்கவும். சூடாகப் பரிமாறவும். [இந்தச் செய்முறை ஸ்ரீ அஹோபில மடம் திருமடைப்பள்ளி தலைமைப் பரிசாரகர் திரு. அப்பு என்பவரால் வழங்கப்பட்டது. கல்யாணவரதன் என்ற பெயருடன் பிரபலமாக ‘அப்பு மாமா’ என்று அறியப்படும் இவர் அஹோபில மடத்தில் தன் 14வது வயதில் சேர்ந்தார். தற்சமயம் தன் எழுபதுகளில், அஹோபில மடத்தில் தலைமைப் பரிசாரகராக இருக்கும் இவர், சமையல் குறிப்புகளையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.]
kootaaraivalli, koodaraivalli, kudaraivalli, koodarai vellum, kootarai valli, koodaarai valli, koodarai valli, akkaravadisal, akkaraivadisal, akaravadisal, akkaraivadisal.

Posted by N.D. NATARAJA DEEKSHIDHAR

 

Copyright 2008 All Rights Reserved By Saran.Jkp