ராம அவதாரம்
தசரதன் என்ற அரசன் அயோத்தியை அரசாண்டு வந்தான். அவனுக்கு கோசலை, கைகேயி, சுமத்திரை என்ற மூன்று மனைவியர் உண்டு. எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினான். யாகங்கள் பல செய்தான். அதன் பயனாக அவன் மனைவியர் மூவரும் கருவுற்றனர்.
தசரதனின் முதல் மனைவி கோசலை ஆவாள். அவள் வயிற்றிலிருந்து திருமால் இராமராகப் பிறந்தார்.
இரண்டாம் மனைவி கைகேயி வயிற்றில் பரதன் பிறந்தான். மூன்றாம் மனைவி சுமத்திரை வயிற்றில் இலக்குவன், சத்துருக்கன் என்ற இருவரும் பிறந்தனர்.
தசரதன் தம் மக்கள் நால்வரையும் குலகுருவாகிய வசிட்டரிடம் கல்வி கற்கச் செய்தான். அவர்கள் நால்வரும் கல்வி கேள்விகளிலும், போர்ப்பயிற்சிகளிலும் சிறந்து விளங்கினர்.
விசுவாமித்திரர் என்ற முனிவர் காட்டில் வேள்வி செய்தார். தாடகை முதலான அரக்கர்கள் அவர் வேள்விக்கு இடையூறு செய்தனர். விசுவாமித்திரர் தசரதனிடம் வந்தார். தம் வேள்வியைக் காக்கும் பொருட்டு இராமனை அனுப்புமாறு கேட்டார். தசரதர் இராமனுடன் இலக்குவனையும் அனுப்பி வைத்தான். இராமரும், இலக்குவனும் தாடகை முதலாய அரக்கர்களை வதம் செய்து முனிவர் வேள்வியைக் காத்தனர். வேள்வியும் சிறந்த முறையில் முடிந்தது.
பிறகு விசுவாமித்திரர் இராமனையும் இலக்குவனையும் அழைத்துக் கொண்டு மிதிலை சென்றார். சனகன் என்ற மன்னன் மிதிலையை ஆண்டுவந்தான். அவனுக்குச் சீதை என்ற ஓர் அழகிய மகள் இருந்தாள். தம்மிடம் உள்ள வில்லை வளைப்பவருக்குச் சீதையைத் திருமணம் செய்து கொடுப்பதாக அவன் அறிவித்திருந்தான்.
மன்னர்கள் பலர் அவ்வில்லை வளைக்க முயன்றனர்,முடியவில்லை. இராமர் அவ்வில்லை வளைத்து முறித்தார். சனகன் மகிழ்ந்து தன் மகள் சீதையை இராமருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.
திருமணம் முடிந்து வந்த இராமருக்கு முடிசூட்ட எண்ணினான் தசரதன். அதற்கு நாளும் குறித்து விட்டான். எல்லா ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன.
கைகேயியின் தாதி கூனி ஆவாள். அவள் கைகேயியின் மகன் பரதனுக்கு முடிசூட்ட எண்ணினாள். அதனை கைகேயியிடம் தெரிவித்தாள். முதலில் கைகேயி ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு பலவிதமாகச் சொல்லிக் கூனி கைகேயியின் மனத்தை மாற்றிவிட்டாள்.
தொடரும்……
No comments:
Post a Comment