பசுக்களையும் பாவையரையும்
பாலகரையும் ஆயர்களையும்
இந்திரனின் கோபத்திலிருந்து
காப்பாற்ற கோவர்த்தன மலை
தூக்கி நிற்கும் கோபாலக் கிருஷ்ணன்!
இந்திரனின் கோபத்தால் ஆயர்குலத்தில் மழை கொட்டித் தீர்த்தது. மக்கள் என்ன செய்வதென தெரியாமல் கலங்கினர். இடுப்பளவு தண்ணீர் வந்து விட்டதால், பசுக்களைக் காக்க என்ன செய்வதென புரியவில்லை. அவர்கள் கண்ணனிடம் ஓடி வந்தனர்.
கண்ணா! நீ சொன்னதால் தான் இந்திர பூஜையை நிறுத்தி விட்டு, கோவர்த்தன மலைக்கு பூஜை செய்தோம். ஆனால், மேகங்களுக்கு அதிபதியான அவன், எங்கள் மீது கோபம் கொண்டு, இப்படி மழை பெய்யச் செய்துவிட்டானே! நாங்கள் இனி எங்கு போவோம்? வீடுகள் மூழ்கும் நிலைக்கு வந்து விட்டதே, என்றனர்.
அனைவரையும் புறப்படும்படி உத்தரவிட்ட கண்ணன், கோவர்த்தனகிரி அடிவாரத்திற்கு வந்தான். மலையை தன் சுண்டு விரலால் தூக்கினான். அனை வரையும் மலைக்கு கீழ் செல்லும்படி கூறினான். இப்போது சொட்டு மழை கூட யார் மீதும் படவில்லை. மலை மேல் பெய்த மழைநீர், வெவ்வேறு திசைகளில் ஓடியது. எல்லாரும் கண்ணனைப் பாராட்டினர். மலையடிவாரத்தில் தற்காலிக கூடாராங்கள் அமைத்து தங்கிய மக்கள், வழக்கம் போல் பால் கறப்பது, தயிர் கடைவது, வெண்ணெய் எடுப்பது என அன்றாட வேலைகளில் மூழ்கிவிட்டனர்.
இந்திரனுக்கு பயம் வந்துவிட்டது. கோவர்த்தன மலையை தூக்கி வைத்திருந்த கண்ணனிடம் ஓடிவந்தான். கண்ணா! என்னை மன்னித்து விடு. ஆண்டுதோறும், எனக்கே இந்த மக்கள் விழா எடுப்பார்கள். அதன் காரணமாக காலாகாலத்திற்கும் தேவையான மழையை நானே தந்து கொண்டிருந்தேன். புல், பூண்டுகள் ஏராளாமாய் கிடைத்ததால், இங்கிருக்கும் பசுக்கள் துன்பப்பட்டதே இல்லை. இருப்பினும், நீ இருக்கும் இடத்தில் என் பெருமையை காட்டிக் கொள்வதற்காக, இப்படி மழை பெய்யச் செய்தது தவறு தான். மழை நின்று விட்டது. மக்கள் அவரவர் இடங்களுக்குச் செல்லலாம். பசுக்களை பாதுகாத்ததால், உன்னை உலகத்தார் கோவிந்தன் என்று அழைப்பர், எனச் சொன்னான்.
கண்ணன் இந்திரனிடம், இந்திரா! நீ மேகங்களின் அதிபதியாக இருக்கலாம். அதனால், பூமியில் பயிர்கள் விளையலாம். ஆனால், நாங்கள் பயிர் செய்யும் வேலை செய்பவர்களல்ல. மாடு மேய்த்து பிழைப்பவர்கள். எங்களுக்கு பசுக்களே தெய்வம். யாருக்கு எந்த வேலை தரப்பட்டிருக்கிறதோ, அதை ஒழுங்காகச் செய்தாலே, உலகத்தின் இயக்கம் தளராது. இந்த மக்கள் எனது பூமியில் உள்ளனர். படிக்காத இவர்கள், எந்தப் பாவமும் செய்யாதவர்கள். பாவம் செய்யாதவர்களுக்கு தேவர்கள் தண்டனை தருவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. நீயோ, இவர்களைத் தண்டித்தாய். இங்கிருக்கும் கோவர்த்தன மலையில் பெய்யும் மழையால் புற்கள் ஏராளமாக வளரும். அவற்றை உண்ணும் பசுக்கள் ஏராளாமாக பால் தரும். எனவே, அவர்கள் உன்னை வணங்குவதில் அர்த்தமில்லை எனக்கூறி, மலையை வணங்கச் செய்தேன். இயற்கையே மனிதனின் முதல் தெய்வம். இயற்கையைக் காப்பாற்றுவோரை இறைவன் காப்பாற்றுவான், என்றார். இந்திரன் கண்ணனிடம் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டு இந்திரலோகம் திரும்பினான்.
மலைகள், நீர்நிலைகள், நிலம், காற்று ஆகியவை இறைவனால் நமக்கு அருளப்பட்டவை. அவற்றை அசுத்தப்படுத்தாமலும், தெய்வம் போல் நினைத்து பயந்து நடந்தால் நமக்கு எவ்வித துன்பத்தையும் இறைவன் தரமாட்டான்.
ஹரே கிருஷ்ணா….